கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு விற்பனையாளர் ஒருவரை தனிப்படைக் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்த காவல் அதிகாரிகள் யார், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் ஆதாரத்துடன் வழங்கப்பட்டன.
இதையொட்டி, சிதம்பரம் டிஎஸ்பி லாமேக், ஆய்வாளர் ரமேஷ் பாபு, உதவி ஆய்வாளர் பரணிதரன், சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன், காவலர்கள் கணேசன், கோபாலகிருஷ்ணன், தனிப்பிரிவு காவலர் கார்த்தி ஆகியோர் லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்தன. இவர்கள் சிதம்பரத்தில் இருந்தால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால், கடந்த செப்டம்பர் 2-ம் தேதி இரவு இவர்கள் அனைவரும் திடீரென வேலூர் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டனர்.இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இவர்கள் லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்தது உறுதியானதை அடுத்து, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கின் உத்தரவின்படி, டிஎஸ்பி லாமேக் தவிர மற்ற ஆறு பேரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு செப்டம்பர் 4-ம் தேதி இரவு வெளியிடப்பட்டது.
டிஎஸ்பி லாமேக் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிதம்பரம் காவல் நிலையத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்த மேலும் நான்கு காவலர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.
ஒரே காவல் நிலையத்தில் ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.