ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் மாநிலத்தில் சவாய் மான் சிங் என்ற அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை முழுவதும் தீப்புகை வேகமாகப் பரவியதால் சிகிச்சைப் பெற்று நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியேறி சென்றனர். மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், நோயாளிகளை வெளியேற்றினர், அவர்களை கட்டிடத்திற்கு வெளியே உள்ள அவர்களின் படுக்கைகளுக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், சில நோயாளிகள் மருத்துவமனைக்குள்ளேயே சிக்கினர்.
இதற்கிடையில், உடனடியாக இச்சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த பயங்கர தீ விபத்தில், சிகிச்சைப் பெற்று வந்த 6 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பல்வேறு ஆவணங்கள், ஐ.சி.யூ உபகரணங்கள், இரத்த மாதிரி குழாய்கள் மற்றும் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பிற பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷார்ட் சர்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஜோகராம் படேல் மற்றும் உள்துறை இணை அமைச்சர் ஜவஹர் சிங் பெதம் ஆகியோர் மருத்துவமனையை பார்வையிட்டபோது, ​​இரண்டு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தீ விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனை ஊழியர்கள் ஓடிவிட்டதாகக் குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது.