திருநெல்வேலி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், திருநெல்வேலி மேலப்பாளையத்தில் நடைபெற்ற அரசியல் எழுச்சி மாநாட்டில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி.,"காயிதே மில்லத் அன்றே சொன்ன பாடத்தை ஏற்று நடந்திருந்தால், இன்றைய பாஜக நேர்வழியில் நடந்திருக்கும். இந்திய நாட்டின் சுதந்திர போராட்டத்தில் முன்னின்று போராடியவர்கள் இஸ்லாமியர்கள். ஆனால், பாஜகவினர் யாரை தலைவராக முன்னிருத்துகின்றனரோ அவர்கள் அனைவரும் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டு வெளியே வந்தவர்கள்.
இன்று யாரெல்லாம் பாஜகவை எதிர்க்கிறார்களோ, அவர்களை ‘அர்பன் நக்சல்’ என்று அழைக்கிறார்கள். என்னை ஒவ்வொரு முறையும்‘அர்பன் நக்சல்’ என அவர்கள் சொல்லும் போதெல்லாம் நாட்டின் இறையான்மையை காக்க சரியான பாதையில் செல்கிறோம் என்ற பெருமையாக உள்ளது. பல ஆய்வுகளைப் பார்க்கும் போது, சிறுபான்மையினருக்கு எதிர்ப்பு காட்டும் நாடாக இந்தியா இருப்பதாக தெரிகிறது. அதற்குக் காரணம் ஆட்சியில் இருக்கும் பாஜக என்பதை மறக்கக் கூடாது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னாள் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டிய பாஜக, ஆட்சிக்கு வந்தபின்னர் இஸ்லாமியர்களுக்கு எதிரான மசோதாக்களாக கொண்டுவந்துள்னர். சி.ஏ.ஏ உள்ளிட்ட சட்டங்களை கொண்டுவந்த போது அதனை எதிர்காமல் இஸ்லாமியர்களின் சகோதரன் என கூறிய எடப்பாடி பழனிச்சாமி, இப்போது அதனை கொண்டுவந்த பாஜகவுடன் சேர்ந்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொன்ன சகோதர தத்துவம் எங்கு சென்றது என தெரியவில்லை.
சி.ஏ.ஏ சட்டத்தை எதிராக தொடர்ந்து திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் எதிர்த்து வருகிறது. கணவன் மனைவி விவகாரத்தில், மனைவியை பிரியும் நபரை சிறைக்கு அனுப்பும் நடைமுறை வேறு எந்த மதத்திலும் இல்லாத நிலையிலும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் ‘முத்தலாக் தடை’ என்ற சட்டத்தை கொண்டுவந்து அவர்களை அச்சுறுத்துகின்றனர்.
இஸ்லாம் மார்கத்தில் இல்லாத ஒரு நடைமுறையை புதியதாக கொண்டு, வந்து இஸ்லாமியர்களை அச்சுறுத்துகின்றனர். மக்களுக்கும்நாட்டிற்கும் விரோதமாக செயல்படுபவர்கள் பாஜகவினர். மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் என்ற ஒன்றை கொண்டுவந்துள்ளனர்.
ஒன்றிய அரசு அறிவிக்கும் அனைத்து திட்டத்திற்கு வைக்கப்படும் பெயர்கள் அனைத்தும் இந்தி, சமஸ்கிருதத்தில் தான் வைக்கின்றனர். அதனை புரிந்துகொண்டு மனு அளித்து பெறுவதே சிரமமான ஒன்று. ஆகவே, தமிழகத்தில் “இந்தி வேண்டாம்” என விட்டுவிட்டோம். அதைத் தொடர்ந்து கேரளா, மகாராஷ்டரமும் இந்தியை இப்போது தவிர்த்துவிட்டது. ஒன்றை கொண்டுவந்தால் அதனை தொடர்ந்து அனைத்தும் வந்துவிடும் என்பதால் தான், இந்திக்கு எதிரான போராட்டத்தை முன்பே மொழிப்போராக முன்னெடுத்தோம்.
பல தொகுதிகளில் இஸ்லாமிய, தலித் சமூக மக்களின் பல வாக்குகள் காணமல் போய்விட்டது. பீகாரில் மட்டும் 55% பெண்கள் வாக்குகள் காணமல் போய்விட்டது. பெண்களை பார்த்தால் பாஜகவிற்கு ஏன் பயம் என தெரியவில்லை. அவர்கள் தான் சிந்தித்து வாக்களிப்பார்கள் என்பதால் தான் 55% வாக்குகளை நீக்கிவிட்டனர்.
பிகாரில் பல தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணிகள் 3000க்கும் குறைவான வாக்குகள் பெற்று தான் கடந்தமுறை வென்றனர். இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் பல மாநிலங்களில் இதே நடைமுறையை பின்பற்றி தான் வென்றுள்ளனர். இப்போது, ஒன்றிய அரசு மக்கள் வாக்களித்து வந்ததா அல்லது தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்பால் வந்ததா என்ற சந்தேகம் மக்களுக்கு இப்போது வந்துவிட்டது. தென் மாநிலங்களின் 2 கட்சிகளை நம்பி தான் ஒன்றிய அரசின் ஆட்சி நடந்து வருகிறது.
இந்தியாவின் வருங்காலத்தை தாங்களே தீர்மானிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஆனால், அது நடைபெறாது. நியாயமான தேர்தலுக்கு அவர்கள் அஞ்சுவதால், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் முறையை மாற்றி வருகின்றனர். இந்த நாட்டின் ஒவ்வொரு மனிதரின் உரிமையையும், அவர்களின் மொழியையும், மதச் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஆட்சியை விரைவில் உருவாக்கி காட்டுவோம்” என்றார்.