Advertisment

"ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள்…’’ - இபிஎஸ் அதிரடி பேட்டி!

Eps2 (4)

கோப்பு படம்

சேலம் விமானநிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தேசிய ஜனநாயகக் கூட்டணி சரித்திர சாதனை படைத்துள்ளது. .இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தேர்தலுக்கு முன்பாக எஸ்.ஐ.ஆர் ஒரு மோசடி என்று குற்றம் சுமத்தினார்கள். எஸ்.ஐ.ஆர் பணி என்பது உண்மையான வாக்காளர்கள் தேர்தலில் பங்குபெற வேண்டும் என்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு விமர்சனங்களை மீறி தே.ஜ கூட்டணி வென்றுள்ளது. இதிலிருந்து உண்மையான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

Advertisment

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் அறிவிப்பட்டவுடனே திமுக கூட்டணி கட்சிகள் எதிர்த்தன. அதற்குக் காரணம் பல ஆண்டுகளாக இறந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. நகரப்பகுதியில் வசிப்பவர்கள் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்துள்ளனர் அவர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்தன. எஸ்.ஐ.ஆர் மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு, நேர்மையான பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன்பின் தேர்தல் நடைபெற்றால் நியாயமான தேர்தலாக இருக்கும். அதைத்தான் நாங்கள் குறிப்பிட்டோம்.
21 ஆண்டுகளாக எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளவில்லை, இதற்கு முன்பு 8 முறை மேற்கொள்ளப்பட்டது. இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் தொடர்ந்து இடம் பெற்றிருந்தனர். பி.எல்.ஓ வீடு வீடாகச் சென்று விசாரித்து படிவங்களைக் கொடுத்துப் பெறவேண்டும். அதுதான் நடைமுறை. ஆனால் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணி பல்வேறு மாவட்டங்களில் சுணக்கமாக இருக்கிறது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை பி.எல்.ஓ ஒருவர் 4ம் வகுப்பு படித்துள்ளார். அவரால் எப்படி மக்களிடம் விளக்கமாக எடுத்துச்சொல்ல முடியும்? இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், அவரை மாற்றவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு முறையாக நடைபெறக் கூடாது என்பதற்காகவே எதிராக செயல்படுகிறார்கள். அரசு அவர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வருகிறது.

Advertisment

பி.எல்.ஓக்களை தேர்தல் ஆணையம் நேரடியாக நியமிப்பதில்லை. மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக இருக்கும் மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையர்களும்தான் நியமிக்கிறார்கள். அப்படி நியமிக்கும்போது தகுதியானவர்களை நியமிக்காததால் குளறுபடி நடக்கிறது. இனிமேலாவது தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட வேண்டும். எந்தெந்த இடத்தில் எஸ்.ஐஆர் பணிக்கு முரண்பாடாக செயல்படுகிறர்கள் என்பதைக் கண்டறிந்து, உண்மையான நபர்களை வாக்காளர் பட்டியல் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…’’ என்றார். இதையடுத்து செய்தியாளர் கேள்விகளுக்குப் பதிலளித்தார். 

கேள்வி : எஸ்.ஐ.ஆர் படிவத்திலேயே குழப்பம் இருப்பதாகச் சொல்கிறார்களே?

இபிஎஸ் : படிவத்தில் குழப்பமில்லை. தகுதியான பி.எல்.ஓ நியமிக்க வேண்டும். 3 காலம் தான் இருக்கிறது. 4ம் வகுப்பு படித்த பி.எல்.ஓவால் எப்படி பூர்த்தி செய்வதற்கு சொல்லித்தர முடியும்? பி.எல்.ஓக்களை யார் நியமிக்கிறது? அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தான். அவர்கள் முறையாக செயல்படாதது தான் குழப்பம். அதுமட்டுமில்லை, காலம் போதாது என்கிறார்கள். ஒரு தேர்தல் அறிவித்து ஒரே மாதத்தில் முடிகிறது. 14 நாட்களில் நாமினேஷன் முடிகிறது, 14 நாட்களில் வாக்குகள் கேட்கிறோம். 3 நாட்கள் கழித்து வாக்கு எண்ணி முடிக்கிறார்கள். 30 நாளில் எல்லாமே முடிந்துவிடுகிறது. அப்படியிருக்க ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு பி.எல்.ஓ இருக்கிறார். ஒரு பாகத்துக்கு 300 வீடுகள் தான் இருக்கிறது. ஒரு நாள் 50 வீடுகள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு வாரத்தில் படிவம் கொடுக்கலாம், 10 நாட்களில் திரும்ப வாங்கலாம். வீட்டில் இல்லாதவர்களுக்கு மீண்டும் செல்லலாம். 

ஒவ்வொரு தேர்தல் நடைபெறும் போதும் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பு 5 நாட்களில் பூத் சிலிப் கொடுத்து முடிக்கிறார்கள். ஏன் ஒரு மாதத்தில் படிவத்தை வாங்க முடியாது? திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். எடப்பாடி தொகுதியில் 5 ஆயிரம் இறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தொடர்கிறது. அதிமுக சார்பில் எஸ்.ஐ.ஆருக்கு முன்பாகவே இறந்தவர்கள், இரட்டை வாக்காளர்கள், குடிபெயர்ந்தவர்கள் போன்ற போலி வாக்காளர்கள் முறையாகக் கண்டறிய கேட்டோம். சேலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் பல்லாயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியிலும் இதே நிலை நீடிக்கிறது. இதை நீக்க பலமுறை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தும் நீக்கப்படாததால் சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம்.

ஆர்கேநகரில் 31 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டது, கருரில் 10 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டது. திநகரில் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டு வழக்குத் தொடர்ந்தோம், அப்போதுதான் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆரின்போது நீக்குவதாக சொன்னது. தேர்தல் வரும்போது திமுக இவர்களை வைத்து கள்ள ஓட்டு போடுவார்கள். எஸ்.ஐ.ஆர் பணி நடந்தால் திருட்டு ஓட்டு போட முடியாது. 
சென்னை மாநகராட்சி தேர்தலில் திருட்டு ஓட்டுப்போட்டவரை ஜெயக்குமார் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தார். ஆனால், அவரைத்தான் சிறையில் அடைத்தனர். இதெல்லாம் நடக்க கூடாது என்றுதான் எஸ்.ஐ.ஆர் கேட்டோம்.

கேள்வி : வெளியில் எஸ்.ஐ.ஆரை எதிர்த்துவிட்டு, நீதிமன்றத்தில் கால அவகாசம் போதாது என்று திமுக இரட்டை வேடம் போடுகிறதா?

இபிஎஸ் : இதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம். எப்படி முறைகேடாக வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது திமுகவுக்கு கைவந்த கலை. அதனால்தான் எதிர்க்கிறார்கள். 

கேள்வி : பீகார் தேர்தல் வெற்றியை சதி என்கிறார்களே?

இபிஎஸ் : எப்படி சதி என்று சொல்ல முடியும்? வாக்காளர்கள் தானே ஓட்டு போட முடியும். அவர்கள் தோற்றால் சதி என்பார்கள், ஜெயித்தால் நல்லது என்பார்கள்.

கேள்வி : 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்களே பீகாரில்?

இபிஎஸ் : ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளனர். ஆர்கேநகரில் புள்ளி விவரத்தோடு கொடுத்தும் நீக்கவில்லை, நீதிமன்றம் உத்தரவிட்டதால் 31 ஆயிரம் நீக்கப்பட்டனர், இன்னும் 10 ஆயிரம் வாக்குகள் நீக்கப்படவில்லை. ஒரு தொகுதியில் இப்படியென்றால், ஏன் ஒரு மாநிலத்தில் 65 லட்சம் வாக்குகள் வராது? 
இதில் யார் மீதும் எந்த வித தவறும் இல்லை. எல்லா கட்சிகளும் பி.எல்.ஏ2 நியமித்துள்ளனர். எஸ்.ஐ.ஆரை எதிர்த்துவிட்டு, மற்ற கட்சியினரை விட திமுக தான் தங்கள் கட்சியின் பி.எல்.ஏ2க்களை பி.எல்.ஓவுடன் வீடுவீடாக அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். புகைப்படம் எடுத்து வைத்துள்ளோம்.

கேள்வி : அண்ணாமலை 2 ஆயிரம் கோடியில் கர்நாடகத்தில் வில்லா கட்டுவதாகச் செய்தி வருகிறதே?

இபிஎஸ் : அதுபற்றி முழு விவரம் எனக்குத் தெரியாது. பத்திரிகை செய்தி வைத்து கேட்டால் பதில் சொல்ல முடியாது.

கேள்வி : 400 கோடி மின்மாற்றி கொள்முதல் தொடர்பாக வழக்கு கூட பதிவாகவில்லையே?

இபிஎஸ் : டிரான்ஸ்பார்மர் டெண்டர் விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது நாம் பேச முடியாது. அது சரியா, தவறா என்று நீதிமன்றம் தான் சொல்ல முடியும். அதுமட்டுமில்லை, 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஸ்மார்ட் மீட்டர் வைப்பதற்கு மிகப்பெரிய ஊழல் நடைபெற இருக்கிறது. இதற்கு பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதுகுறித்தும் அதிமுக பொதுநல வழக்குத் தொடரும். 30 ஆயிரம் கோடி ரூபாய் சாதாரணமல்ல. வேண்டுமென்றே திட்டமிட்டு அரசாங்கம் கொள்முதல் விலையை அதிகரித்து அதில் முறைகேடு செய்ய முயற்சிக்கிறது. இந்த டெண்டர் விவகாரங்கள் முழுமையாக வெளிவந்த பின்னர், அதில் தவறு இருக்கும்பட்சத்தில் சட்டரீதியாக சந்திப்போம்" என்றார் இ.பி.எஸ்.!

admk eps
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe