மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயதான ரச்சனா கோல்டார், தனது கணவர் ராதா ராமனுடன் பன்னா மாவட்டத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள பட்காடி குர்தி என்ற பகுதியில் ஒரு விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளார். அந்த நிலத்தில் கணவன்-மனைவி சேர்ந்து ஒரு சுரங்கத்தை அமைத்து, விலையுயர்ந்த வைரக்கற்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்படி தொடர்ந்து தேடிவந்த ரச்சனாவிற்கு, கடந்த வாரம் அதிர்ஷ்டவசமாக திடீரென ஒரு பிரகாசமான கல் தென்பட்டது. அதை எடுத்துப் பார்த்தபோது, அது வைரக்கல் என்பது தெரியவந்தது. அப்போது அவருக்கு நம்பிக்கை துளிர்த்ததால், அதே இடத்தில் தொடர்ந்து தேடத் தொடங்கினார்.
தனது விடாமுயற்சியின் பலனாக, ஒரே வாரத்தில் ரச்சனாவிற்கு 8 வைரக்கற்கள் கிடைத்துள்ளன. இந்தக் கற்களை அவர் தனது வீட்டில் வைத்திருக்காமல், உடனடியாக பன்னாவிலுள்ள வைர அலுவலகத்திற்குச் சென்று, அவற்றை எடைப் போட்டுப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து பெண் தொழிலாளி ரச்சனா கூறுகையில், “குத்தகைக்கு எடுத்த விவசாய நிலத்தில் நாங்கள் ஒரு சுரங்கத்தை அமைத்தோம். அந்த சுரங்கத்திலிருந்து ஒரே வாரத்தில் 8 வைரக்கற்களைக் கண்டறிந்துள்ளோம். நாங்கள் அந்தப் பண்ணையில் தனியாக வசித்து வருவதால், உடனடியாக அந்தக் கற்களை அலுவலகத்திற்குக் கொண்டுவந்து டெபாசிட் செய்துவிட்டேன்” எனத் தெரிவித்தார்.
அதன்பிறகு, இச்சம்பவம் குறித்து வைர நிபுணர் அனுபம் சிங் கூறுகையில், “ரச்சனா டெபாசிட் செய்திருக்கிற கற்கள் அனைத்தும் சேர்ந்து 2.53 காரட் எடை உள்ளன. ஒவ்வொரு கற்களையும் தனித்தனியாகப் பார்க்கும்போது, அவை 0.14 முதல் 0.79 காரட் வரை இருக்கின்றன. அவற்றில் 6 கற்கள் பிரகாசமான தரம் கொண்டவை; 2 கற்கள் சற்று தரம் குறைந்தவை. இருப்பினும், அந்தக் கற்களின் சரியான மதிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அடுத்த ஏலத்தின்போது இந்தக் கற்களும் ஏலத்திற்கு வரும்” என்றார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதுபோன்ற விலையுயர்ந்த கற்கள் கிடைப்பது முதன்முறையல்ல. குறிப்பாக பன்னா மாவட்டத்தில் பல தசாப்தங்களாகவே இதுபோன்ற கற்கள் கண்டறியப்பட்டு, ஒரே இரவில் அங்குள்ள சாதாரண மக்களை லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாற்றியுள்ளன. அதனாலேயே பன்னா மாவட்டம் ‘ரத்திணக் கற்களின் கருவூறை’ என்று அழைக்கப்படுகிறது.
பன்னா மாவட்டத்தில் அரசாங்கக் குத்தகைக்கு ஒதுக்கப்பட்ட 2 சுரங்கங்கள் உள்ளன. அதுபோக, பலர் தனியார் சுரங்கங்களைக் குத்தகைக்கு எடுக்கின்றனர். அங்கு வெயில், மழை, குளிர் என எந்தப் பருவமாக இருந்தாலும், கையில் மண்வெட்டி மற்றும் சல்லடைகளுடன் காலை முதல் மாலை வரை வெறுங்காலிலேயே மக்கள் ரத்திணம் மற்றும் வைரக் கற்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி கிடைக்கும் வைரக்கற்களை ஏலம் விட்டு, ராயல்டி மற்றும் வரிகளைக் கழித்து, கணிசமான தொகையைக் கற்களைக் கொண்டுவந்தவருக்கு கொடுக்கப்படும். ரச்சனாவிற்கு முன்பே பலர் இதுபோன்று விலையுயர்ந்த கற்களைக் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.