கடந்த ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பெரும் விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 229 பயணிகள் என 241 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானம் விழுந்து நொறுங்கியதால் அப்பகுதியில் வானுயர புகை எழும் காட்சிகளும், விமானம் தீப்பற்றி எரியும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதை பதைக்க வைத்தது.
அதனை தொடர்ந்து, கடந்த ஜூலை 21ஆம் தேதி வங்கதேசத்தின் டாக்காவில் விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று எதிர்பாராதவிதமாக பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்து நொறுங்கித் தீ பிடித்ததில் 70 பேர் காயமடைந்ததாகத் தகவல் வெளியானது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டு விபத்துக்களும் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் ஒரு விமான விபத்து நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் கபரோவ்ஸ்க் பகுதியில் இருந்து 50 பயணிகளுடன் டின்டா சென்ற An-24 ரக விமானம் ஒன்று இன்று (24-07-25) விழுந்து நொறுங்கியுள்ளது. கட்டப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சீன எல்லையோரம் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமானத்தில் இருந்த அனைவரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டின்டா நகரில் தரையிறங்கும் போது விமானியின் கவனக்குறைவு இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.