கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மலையுடன் கூடிய அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து யானை, கரடி மற்றும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வெளியேறிக் குடியிருப்புக்குள் நுழைவது தொடர்கதையாக உள்ளது. அதோடு இந்த வனவிலங்குகள் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள ஐயர்பாடி ஜே இ பங்களா தேயிலைத் தோட்ட பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று நேற்று (07.12.2025) இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறி அப்பகுதியில் உலா வந்துள்ளது.
அப்போது அங்குப் பணி புரிந்து வரும் அசாம் மாநில புலம்பெயர் தொழிலாளர்களான ரோஜப் அலி - சஜிதா பேகம் தம்பதியரின் 5 வயதுக் குழந்தையான சைபில் அலோன் என்பவரைக் கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென சிறுத்தை தாக்கியது. மேலும் சிறுவனை அங்கிருந்து அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்த புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வால்பாறை வனத்துறையினர், அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து தேயிலைத் தோட்டத்திற்குள் சென்று சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அதே சமயம் சிறுத்தையானது சிறுவனைக் கடுமையாகத் தாக்கி கொன்றுள்ளது. இதனையடுத்து சிறுவனின் உடல் சடலமாக அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. 5 வயது சிறுவனைச் சிறுத்தை தாக்கி தேயிலைத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று வடமாநில புலம்பெயர் தொழிலாளிகளின் குழந்தையைச் சிறுத்தை தாக்கி தேயிலைத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow Us