கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி சானமாவு வனப்பகுதியில் அமைந்துள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (12.10.2025) அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குச் சென்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு வாகனம் பின் தொடர்ந்து வந்தது. அதனைத் தொடர்ந்து மற்றொரு கார் ஒன்றும் வந்துள்ளது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இந்த கார்கள் உட்பட 5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

Advertisment

இதன் காரணமாகப் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து போலீசார் விபத்தில் சிக்கிய காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சரி செய்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கி உள்ளது. அதே சமயம் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு அவர்களது உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Advertisment

இந்நிலையில் விபத்தில் சிக்கியவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அதாவது கனடாவில் இருந்து மணிவண்ணன் என்பவர் வந்துள்ளார். அவரை பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்வதற்காகச் சேலம் பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவரும், அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து அழைத்து வரச் சென்றுள்ளனர். அதன்படி அழைத்து வரும்போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் காரில் பயணித்து 4 பேருமே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.