தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் தற்போது அரங்கேறி வருகின்றன. 

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 5 பேரைச் சுற்றிவளைத்து விசைப் படகுடன் சிறை பிடித்து அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் மீனவர்கள் 5 பேரும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடியிடம், முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்டிருந்த கோரிக்கை மனுவில், “இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவது ஏழை மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ளது.இந்த சிக்கலான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணப் பிரதமர் மோடி நேரடி கவனத்தைச் செலுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய படகுகளையும் விடுவிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.