திருவேற்காடு அருகில் உள்ள சோழபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் 29 வயதான வைரவேல். இவர், டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வைரவேலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் காரில் கடத்திச் சென்றனர். இதுதொடர்பாக வைரவேலின் பெற்றோர் திருவேற்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த திருவேற்காடு போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் கடத்தப்பட்ட வைரவேல் ஆவடியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வைரவேலை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கஜேந்திரன் (59), அவரது கார் ஓட்டுநர் சிவப்பிரகாசம் (29), வக்கீல் ரிஷிகுமார் (27), நவீன்குமார் (25), முகேஷ் (25) ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
ஆவடி காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் 65 வயதான ராவூத் பசாரி. தனது கணவர் உயிரிழந்த நிலையில் பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால், ராவூத் பசாரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டிற்குச் சென்று வந்த வைரவேல், அவருக்கு தேவையான சிறு சிறு உதவிகளையும் செய்து கொடுத்து வந்துள்ளார். பின்னர் ராவூத் பசாரியின் நம்பிக்கையைப் பெற்ற பின், கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதிதாக வீடு ஒன்று விலைக்கு வருவதாகவும், அதனை வாங்கினால் எதிர்காலத்தில் நன்றாக இருக்கும் எனவும் கூறியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து வைரவேல் கூறியதை நம்பிய ராவூத் பசாரி, தனது வீட்டில் இருந்து நகைகளை அடகு வைத்து ரூ.85 லட்சம் வரை பணத்தைக் கொடுத்துள்ளார். இந்தச் சூழலில் வெளிநாட்டில் இருந்து ராவுத்து பசாரியின் மகள் போன் செய்து வீட்டில் இருந்த நகைகள் குறித்து கேட்டறிந்துள்ளார். அப்போது வைரவேல் குறித்தும், அவர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வீடு வாங்குவது குறித்தும் கூறியிருக்கிறார். பின்னர், அவரது மகள் இதுகுறித்து விசாரணை நடத்தியபோது தான் வைரவேல் ஏமாற்றி பணத்தை மோசடி செய்துள்ளது அம்பலமானது.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த ராவூத் பசாரி தனக்குத் தெரிந்த கஜேந்திரன் என்பவரிடம் நடந்தவற்றைக் கூறியிருக்கிறார். அதையடுத்து கஜேந்திரன் சிலரை வைத்துக்கொண்டு வைரவேலை கடத்தி அடித்து உதைத்து பணத்தைக் கேட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/19/untitled-1-2025-09-19-17-07-37.jpg)