மாந்திரீகம் செய்வதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலம் பூரணியா மாவட்டம் தெட்கமா எனும் கிராமத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து மாந்திரீக பயிற்சியில் ஈடுபடுவதாக அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சம்பந்தப்பட்ட வீட்டாரின் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் வீட்டிலிருந்தவர்களை தீவைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சோனு என்ற 16 வயது சிறுவன் ஊர்மக்களிடம் இருந்து தப்பித்து போலீசாரிடம் தங்கள் குடும்பம் தாக்கப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளான்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எரிந்த நிலையில் கிடந்த ஐந்து உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் முக்கிய நபராகக் கருதப்படும் ஒருவரை தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதே கிராமத்தில் அண்மையில் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் அந்த குழந்தையின் உயிரிழப்புக்கு இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செய்த மாந்திரீகம் தான் காரணம் என ஊர் முழுக்க பேச்சு எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் மாந்திரீக பயிற்சியில் ஈடுபடுவதாகக் கூறி குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி ஐந்து பேரை எரித்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.