அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் தலைமை நகரமான சாய்பாசா பகுதியில் ஒரு அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில், தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மரபுவழி மரபணு மாற்றங்களால் ஹீமோகுளோபினில் பற்றாக்குறை உண்டாகும் இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, உள்ளூர் ரத்த வங்கி மூலம் மருத்துவமனை நிர்வாகம் ரத்தம் மற்றம் செய்து சிகிச்சையளித்துள்ளது. 

Advertisment

இந்த நிலையில், ரத்தம் மாற்றம் செய்யப்பட்ட 7 வயது குழந்தை ஒன்றுக்கு எச்.ஐ.வி நோய் பரவியுள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த குழந்தையின் குடும்பத்தினர், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று ரத்த மாதிரியை சோதனை செய்தனர். அதில் எச்.ஐ.வி நோய் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை மருத்துவமனை நிர்வாகம் குழந்தைக்கு மாற்றியதால் அந்த குழந்தைக்கும் எச்.ஐ.வி நோய் பரவியுள்ளது என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது குழந்தையின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராஞ்சியைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தியது. அதில், ரத்தம் மாற்றம் செய்யப்பட்டதில் மேலும் 4 தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ரத்தம் மாற்றம் செய்யும் போது மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி நோய் பரவியுள்ளது என பலரும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இது குறித்து விசாரணை நடத்த ஒரு மருத்துவக் குழுவை மாநில அரசு நியமித்துள்ளது. அதன்படி, ஜார்க்கண்ட் சுகாதார சேவைகள் இயக்குநர் மருத்துவர் தினேஷ் குமார் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு, மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கி மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு வார்டை ஆய்வு செய்து சிகிச்சை பெறும் குழந்தைகளிடமிருந்து விவரங்களைச் சேகரித்து வருகிறது.

இதனை தொடர்ந்து, அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்திருப்பதால் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாநில அரசு இடைநீக்கம் செய்துள்ளது. இது குறித்து மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘சாய்பாசாவில் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தமாற்றம் செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மேற்கு சிங்பூமின் சிவில் அறுவை சிகிச்சை நிபுணரையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் இடைநீக்கம் செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கும், மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் முழு சிகிச்சை செலவையும் ஏற்கும்’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது, ​​மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் 515 எச்.ஐ.வி-பாசிட்டிவ் நோயாளிகளும் 56 தலசீமியா நோயாளிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.