நெல்லையில் ஐடி ஊழியர் கவின் குமார் ஆணவக் கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் நெல்லையில் பள்ளி மாணவனை சிறார்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய 11-ம் வகுப்பு மாணவன் ஒருவர் சக மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. மாணவியின் குடும்பத்தார் இதுகுறித்து மாணவனுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மாணவியினுடைய சகோதரன் தன்னுடைய நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து பதினோராம் வகுப்பு மாணவனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டி வீட்டைச் சூறையாடி இருக்கின்றனர்.

இதில் படுகாயம் அடைந்த மாணவன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் ஐந்து சிறுவர்களை பிடித்து போலீசார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்திருக்கிறார்கள். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.