5 alliance parties agree to contest under DMK's Udhayasuriyan symbol
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட அமைத்து குழு அமைத்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 22ஆம் தேதி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது.
அந்த பேச்சுவார்த்தையில் இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சி 5 தொகுதிகளை கேட்டதாகவும், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் இருந்து 1 சீட்டை கூட்டணி கட்சிகள் தானம் செய்ய வேண்டும் என்று திமுக குழுவினர் கூறியதாக தகவல் வெளியானது. அதனால் இந்த பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி (ஐயுஎம்எல்), மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகிய கட்சிகளுடன் திமுக குழுவினர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அது மட்டுமல்லாமல், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை முடிவில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட 5 கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போது மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளிடம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு கட்சிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை ஆகிய 5 கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us