இண்டிகோ விமான சேவைகள் நிறுவனத்தின் பணியாற்றும் விமானிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகக் கடந்த 4 நாட்களாக பல்வேறு இண்டிகோ பயணிகள் விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விமானிகள் பற்றாக்குறையால் சென்னையில் இருந்து இன்று (06.12.2025) இயக்கப்பட இருந்த 48 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சென்னையிலிருந்து புறப்படும் 28 விமானங்களும், சென்னைக்கு வருகை தரும் 20 விமானங்களும் என ஒரே நாளில் 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். அதே சமயம் சென்னையில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு புறப்பட்டுச் சென்றது. அதே போன்று சென்னையில் இருந்து கொல்கத்தா, புவனேஸ்வர், கோவை, ஜெய்ப்பூர் மற்றும் கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் 10 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் இயக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக விமானச் சேவைகள் ரத்துசெய்யப்படுவதால் பயணிகளுக்கு ஏற்படும் பயண இடையூறுகளைக் குறைக்க, 37 ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதில், “விமானச் சேவைகள் பரவலாக ரத்து செய்யப்படுவதைத் தொடர்ந்து, விமான பயணிகளின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே, பயணிகளுக்கு முழுவதும் சீரான பயணம் மற்றும் போதுமான தங்குமிட வசதிகளை உறுதி செய்ய விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில் மொத்தம் 37 ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், நாடு முழுவதும் 114க்கும் மேற்பட்ட கூடுதல் பயணங்கள் (நடைகள் - trips) இயக்கப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/06/indigo-flight-2025-12-06-08-37-24.jpg)