பண்டிகை ஊர்வலங்களின் போது பெண்களுக்கு 400க்கும் மேற்பட்ட ஆண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் போனலு மற்றும் முஹரம் பண்டிகை ஊர்வலங்களின் போது நடந்து செல்லும் பெண்களுக்கு பெருமளவு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக ஹைதராபாத்தில் உள்ள ‘ஷி டீம்’ தெரிவித்துள்ளது. ‘ஷி டீம்’ என்பது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். பெண்களின் பாதுகாப்பிற்காக செயல்படும் ஷி டீம், கோல்கொண்டா மற்றும் பால்கம்பேட்டை யெலம்மா கோயில் உள்ளிட்ட முக்கிய பண்டிகை ஊர்வலங்களின் போது சுமார் 478 ஆண்கள், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதை கண்டுபிடித்துள்ளது. மொத்தம் 478 ஆண்களில் 92 பேர் 18 வயதுக்குட்பட்டோர் ஆவர்.
ஹைதராபாத் முழுவதும் விழிப்புடன் செயல்படும் ஷி டீம், கடந்த 15 நாட்களில் இது போன்ற பண்டிகை ஊர்வலங்களின் போது பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 478 பேரை பிடித்து பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவு செய்துள்ளது. உடல் ரீதியான தொடுதல் முதல் ஆபாசமான கருத்துக்களை வெளியிடுவது வரையிலான செயல்களுக்காக குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 478 வழக்குகளில், 386 வழக்குகள் பெரியவர்களுக்கு எதிரானவை மற்றும் 92 வழக்குகள் சிறார்களுக்கு எதிரானவை.
பிடிப்பட்ட அனைவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது குற்றவாளிகளுக்கு ரூ.100 வரை நீதிபதி விதித்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் 288 நபர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஹைதராபாத் நகர காவல்துறை, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.