காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்டது நல்லூர் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் துளசிராமன். இவரது மனைவி சுமதி. துளசிராமனுக்கு சுப்பிரமணி மற்றும் ஏழுமலை என இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் நல்லூர் ஏரி அருகே அவர்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி அருகருகே வசித்து வருகின்றனர். இதில் சகோதரர்களில் மூத்தவரான சுப்பிரமணியின் மூன்றாவது மகன் துரை, ஏரிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கால்நடை கொட்டகை கட்டியுள்ளார்.

அதேபோன்று சகோதரர்களில் இளையவரான ஏழுமலை ஏரிக்கு சொந்தமான இடத்தில், குளியலறை கட்ட முயற்சி எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ஏழுமலையை மிரட்டிய துரை, அந்த இடம் முழுவதும் எனக்கு தான் சொந்தம் என அவரை குளியலறை கட்ட விடாமல், மீண்டும் ஏரியை ஆக்கிரமித்து, துரை குளியலறை கட்டிக் கொண்டுள்ளார். இந்தநிலையில்,  துளசிராமன் மற்றும் அவரது மனைவி சுமதி ஆகியோர், வீட்டிற்கு எதிரே உள்ள ஏரிக்கு சொந்தமான இடத்தில், தற்காலிகமாக மாட்டு கொட்டகை கட்ட முயற்சி எடுத்துள்ளார்.

இதை பார்த்த துரை, அந்த இடம் முழுவதும் எங்களுக்கு தான் சொந்தம். இந்த இடத்தில் யாரும் எதுவும் கட்டக்கூடாது, என சுமதியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் இருதரப்பிற்கும் அவ்வப்போது வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து சண்டை நடந்து வந்தாலும், துளசிராமன் மற்றும் சுமதி இருவரும் ஏரி மண்ணைக் கொட்டி அந்த இடத்தில், மாட்டு கொட்டகை அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், 9ம் தேதி காலை சுமதி குளித்து முடித்துவிட்டு, வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, திடீரென சுப்பிரமணியின் மகன் துரை சுமதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சுமதியிடம் தகாத வார்த்தைகளில் துரை பேசியதால் பதிலுக்கு சுமதியும் துரையை திட்டியுள்ளார். இதனால் கொலை வெறியின் உச்சத்திற்கே சென்ற துரை.. தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சரமாரியாக தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

Advertisment

சுமதியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில், இருந்த சுமதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுமதியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சித்தியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய துரையை தீவிரமாக தேடி வருகின்றனர். அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, சித்தியை மகன் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.