8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை, 40 வயது நபர் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி. இவரை, கண்டிவாடாவைச் சேர்ந்த 40 வயதான ஸ்ரீனிவாஸ் கவுட் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தனது ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக ஆசிரியர், தாசில்தார் ராஜேஷ்வர் மற்றும் போலீசார் ஆகியோரைத் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில், சிறுமியை திருமணம் செய்த ஸ்ரீனிவாஸ் கவுட் மற்றும் அவரது மனைவி, சிறுமியின் தாய், இடைத்தரகர், பூசாரி உள்ளிட்டவர்கள் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமி தனது தாய் மற்றும் சகோதரருடன் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகிறார். சிறுமியின் தாய், வீட்டு உரிமையாளரான ஸ்ரீனிவாஸ் கவுட்டுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அதற்கு ஸ்ரீனிவாஸ் கவுட்டின் மனைவியும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு இடைத்தரகர், இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்து கடந்த மே 28ஆம் தேதி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணத்தை உள்ளூர் பூசாரி நடத்தி வைத்துள்ளார். திருமணம் நடந்து முடிந்த பின்பு, அவர்கள் சுமார் இரண்டு மாதங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து, சிறுமி மீட்கப்பட்டு, பாதுகாப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆலோசனை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.