இன்று டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் பேசுகையில், ''கூட்டத்தில் இரண்டு அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பைக் குறைக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி முதல் புதிய வரிகள் அமலாகும். சாமானிய மக்களுக்கான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. டிவி, ஏசி உள்ளிட்ட பொருட்களுக்கு 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. கார்களுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பெரிய கார்களுக்கு 40% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
டிராக்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சிகரெட், பான் மசாலா, குளிர்பானங்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மோட்டார் வாகன பாகங்களுக்கும் இனி 18 சதவீதம் வரி வசூலிக்கப்படும். சோப். ஷாம்பு, டூத் பேஸ்ட் போன்ற பொருட்களுக்கு ஐந்து சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படும். பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற பொருட்களுக்கு வரி இல்லை. நொறுக்கு தீனிகள், வெண்ணெய் போன்ற பொருட்கள் மீதான வரி பதினாறு சதவீதத்தில் இருந்த நிலையில் 12 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படும். தனிநபர் மருத்துவக் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி கிடையாது'' என்றார்.