உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு தினம் நேற்று (01.01.2026) கோலகலமாக கொண்டாடப்பட்டது. 2025ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்து 2026ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வாண வேடிக்கைகளுடன் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினர்.

Advertisment

இந்த நிலையில், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டு 40 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து கிரான்ஸ்-மொன்டானா நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் பாரில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது பட்டாசு வெடித்து கொண்டாட்டப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 40 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Advertisment

படுகாயமடைந்தவர்களை தீயணைப்புத்துறையினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது புத்தாண்டை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடிக்கப்பட்ட போது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சுவிட்சர்லாந்து போலீஸ் சந்தேகித்து வருகின்றனர். இந்த பயங்கர தீ விபத்து சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பாரில் இருந்து மிகப்பெரிய அளவில் புகை வெளியேறி தீப்பற்றி எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.