தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் சூழலில் பரவலாக பல மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் கடலூரில் இடி மின்னல் தாக்கி நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கழுதூர் எனும் கிராமத்தில் மக்காச்சோள தோட்டத்தில் களை வெட்டும் பணியில் அந்த பகுதி பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென மின்னல் இடி உருவான நிலையில் தோட்டத்தில் களை எடுத்துக்கொண்டிருந்த பெண்கள் மீது தாக்கியது. இதில் நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே மின்னல் தாக்கி நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.