திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள சித்தராஜ கண்டிகை பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் 4 மாணவிகளுக்கு இன்று (26.08.2025) பிற்பகல் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து 4 மாணவிகளும் லேசாக மயக்கமடைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 4 மாணவிகளையும் மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு மாணவிக்கு மேலும் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் பள்ளிக்கு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து வந்த ரசாயனம் காரணமாக இந்த மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் மாணவிகள் படித்து வரும் பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் தொழிற்சாலைகள் இருப்பதால் அதிலிருந்து ஏதேனும் நச்சுக் கழிவுகள் வெளியேறி அதன் காரணமாக மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதா? அல்லது மாணவிகள் ஏதேனும் உணவை உட்கொண்டு அதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டதா? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் 4 மாணவிகள் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு பள்ளியில் மயங்கிய சம்பவம் சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.