கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ம் தேதி திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள முக்கொம்பு சுற்றுலாத்தலத்திற்கு தன்னுடைய காதலனோடு வந்த சிறுமி ஒருவரிடம் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு போலீஸார் அத்துமீற முயன்றதாக, அந்தச் சிறுமியும், அவரின் காதலரும் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார், நவம்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி ரோந்து எண் 6-ல் பணிபுரியும் முதல்நிலைக் காவலரான சங்கர் ராஜாபாண்டியன், ஜீயபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சித்தார்த்தன் ஆகிய 4 பேர் மீதும் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

போக்சோவில் கைது செய்யப்பட்ட 4 பேரும் திருச்சி மாவட்ட எஸ்.பி அமைக்கும் தனிப்படை குழுவின் மூலம் நண்பர்களாகியிருக்கின்றனர். அதன்பிறகுதான், இவர்கள் தங்களுடைய கைவரிசையைக் காட்டியுள்ளனர். இவர்கள் அடிக்கடி இணைந்து வெளியே சென்று மது அருந்திவிட்டு, கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறும் நிகழ்வுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதேபோல்தான் அக்.4ம் தேதி முக்கொம்புக்கு நான்கு பேரும் அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியோ, விடுப்போ எடுக்காமலும், உயரதிகாரிகளுக்கு எவ்விதத் தகவலும் சொல்லாமலும் சிவப்பு கலர் காரில் சாதாரண உடையில் அங்குச் சென்றிருக்கின்றனர்.

பிறகு அங்கேயே அமர்ந்து மது அருந்திவிட்டு, காவிரி ஆற்றில் குளித்துவிட்டு மதுபோதையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்து இருந்த இரண்டு காதல் ஜோடிகளை அழைத்து மிரட்டியுள்ளனர். அதில், ஒரு காதல் ஜோடி தப்பித்து ஓடிவிட்டது. மற்றொரு ஜோடியான 17 வயது சிறுமி, அவரின் காதலரான 19 வயது இளைஞர் ஆகியோரை மிரட்டி, அடித்து, 'கஞ்சா விற்பனை செய்கிறீர்களா... உன்னை விசாரணை செய்ய வேண்டும்' என்று கூறி, அந்த இளைஞரை விரட்டி அனுப்பியிருக்கின்றனர்.

Advertisment

அதன் பிறகு, அந்தச் சிறுமியை மாலை 5 மணியளவில் வலுக்கட்டாயமாக மிரட்டி, காரில் ஏற்றியிருக்கின்றனர். மதுபோதையில் அந்தச் சிறுமியிடம் அவரின் உடலைத் தொட்டு மிரட்டிப் பேசி, அவரின் செல் எண்ணைப் பெற்றிருக்கின்றனர். 'எப்போது அழைத்தாலும் போன் பேச வேண்டும், கூப்பிடும் இடத்துக்கு வரவேண்டும்' என்று மிரட்டியிருக்கின்றனர். மேலும், அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டு வீடியோ பதிவும் செய்திருக்கின்றனர். பின்பு, மாலை 6 மணிக்குமேல் அந்தச் சிறுமி சத்தம் போடவும், அவரை காரைவிட்டு கீழே இறக்கிவிட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு அந்த சிறுமியும், அவருடைய காதலரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ உள்பட 4 பேர் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, சம்பவத்தில் ஈடுபட்ட 3 காவலர்கள் மற்றும் ஒரு உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி டிஐஜி உத்தரவிட்டார்.

இந்நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீதான விசாரணையில், உதவி ஆய்வாளர் சசிகுமார், காவலர்கள் சங்கர் ராஜபாண்டியன், பிரசாத், சித்தார்த்தன் ஆகியோர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாயுள்ளது.

இதனால், தமிழ்நாடு காவல் சார்நிலைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 1955 விதி 3 (ஆ) பிரிவின் கீழ், உதவி ஆய்வாளர் சசிக்குமார், காவலர்கள் பிரசாத் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரை பணிநீக்கம் (Dismissal from service) செய்து திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இதில், காவலர் சங்கர் ராஜபாண்டியன் தஞ்சாவூரில் 117 கிலோகிராம் கஞ்சாவை கடத்தியதாக கைது செய்யப்பட்டு, குண்டாஸ் சட்டபடி திருச்சி மத்திய சிறையில் தடுப்புக் காவலில் உள்ளார். இதனால், இவர் மீதான விசாரணை மட்டும் நிலுவையில் உள்ளது. விரைவில் இவர் மீதான விசாரணையும் முடிக்கப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என டிஐஜி தெரிவித்துள்ளார்.