ஆண்ட்ராய்டு செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களின் பரவலான பயன்பாடு, கலாச்சார சீரழிவு மற்றும் குற்றச் சம்பவங்கள் குறித்த விவாதங்களை அதிகரித்துள்ளது. செல்போன்கள் இன்றைய நவீன காலத்தில் இன்றியமையாதவையாக இருந்தாலும், அவற்றின் தவறான பயன்பாடு காரணமாக, சிறுமிகள் முதல் குடும்பப் பெண்கள் வரை பலர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக உறவுகளிலும் பாதிப்புகளை சந்திக்கின்றனர். அப்படி சமுக வலைதளத்தின் தவறான பயன்பாடு மூலம், 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரபிரதேசம் மாநிலம், காசியாபாத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர், அங்குள்ள பள்ளி ஒன்றியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு, இன்ஸ்டகிராம் மூலம் சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கத்தின் காரணமாக இருவரும், செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்தனர்.
இந்த நிலையில் ஜூலை 13 ஆம் தேதி (ஞாயிறு) காலை, சிறுமியின் பெற்றோர் சந்தைக்கு சென்றிருந்ததால், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருந்த சிறுவனிடம் தெரிவித்து, தன்னை சந்திக்க வருமாறு அழைத்திருக்கிறார். அதன்படி, காலை 11.30 மணியளவில் சிறுவன், சிறுமியின் வீட்டின் கதவை தட்டியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் நன்பரை சந்திக்கபோகும் ஆவலில் உற்சாகமாக சிறுமி கதவை திறந்திருக்கிறார். ஆனால், சிறுவனுடன், மேலும் மூன்று சிறுவர்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இவர்கள் எல்லாம் யார்? என்று கேட்பதற்குள், சிறுமியை வீட்டின் உள்ளே தள்ளிய 4 சிறுவர்களும், வலுகட்டாயமாக மாரி மாரி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் மார்க்கெட்டிலிருந்து திரும்பிய மாணவியின் பெற்றோர், வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு, திருடன் நுழைந்துவிட்டானோ என்ற அச்சத்தில் உள்ளே ஓடிச்சென்று பார்த்துள்ளனர். அங்கு, தனது மகளுடன் நான்கு சிறுவர்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்த அவர்கள், உடனடியாக மகளை வெளியே இழுத்து வந்து, சிறுவர்களை வீட்டிற்குள் பூட்டிவிட்டு, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், காவல்துறை வருவதற்குள், குடியிருப்பு பகுதியில் இருந்த சிலர், இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் குடியிருப்பின் பெயர் கெட்டுவிடும் என்று கருதி, வீட்டின் கதவைத் திறந்து நான்கு சிறுவர்களையும் வெளியேற்றியுள்ளனர்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவினகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டிற்கு வந்த நான்கு சிறுவர்களில் மூவர், மாணவி பயிலும் அதே பள்ளியில் 9, 10, மற்றும் 11-ஆம் வகுப்புகளில் படித்து வருபவர்கள் என தெரியவந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், இரு சிறுவர்களை கைது செய்துள்ளனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது, மேலும் மீதமுள்ள இரு சிறுவர்களை காவல்துறை தேடி வருகிறது. இதுகுறித்து பேசிய உதவி காவல் ஆணையர், வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டைனை பெற்று தரப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட தவறான நபரின் பழக்கத்தின் காரணமாக சிறுமி ஒருவர் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியினர் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.