ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே அடர்ந்த வனத்தின் அருகில் உள்ளது கேர்மாளம் மலைப்பகுதி. இப்பகுதியில் கடந்த 16-ம் தேதி மலைவாழ் மக்கள் சிலர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு நிலத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டு மேலே கற்கள் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மலைவாழ் மக்கள் உடனடியாக ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். அதன் பிறகு அந்தக் குழியைத் தோண்டிப் பார்த்த போது அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு, போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/21/6-2025-11-21-17-44-40.jpg)
அதில், அந்நபருக்கு 45 முதல் 50 வயது வரை இருக்கும் என்றும், தலையில் பலமாகத் தாக்கப்பட்டதால் உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொல்லப்பட்ட நபர் யார்? கொலை செய்தவர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வந்தனர். அதேசமயம், சத்தியமங்கலம் டி.எஸ்.பி. முத்தரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட ஆண் சடலம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி செல்வம் எனத் தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்திய நிலையில் பல திடுக்கிடும், அதிர்ச்சிதரும் உண்மைகள் வெளியாகின.
கொண்டையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், அதே கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர்களான ரமேஷ், சதீஷ் என்கிற பஞ்சையன் ஆகியோருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேர்மாளம் மலைப்பகுதிக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது கேர்மாளம் பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருந்த பொம்மன் என்பவருடன் மூவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன்காரணமாக மூவரும் மலைப்பகுதியிலேயே தங்கி விவசாயக் கூலி வேலைகள் செய்து வந்துள்ளனர்.
அந்த வகையில் கடந்த 20-ம் தேதி தீபாவளி தினத்தன்று செல்வம், ரமேஷ், சதீஷ் மூவரும் பொம்மன் விவசாயம் செய்யும் தோட்டத்தில் உள்ள குடிசையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் மூவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது. அதில் ஆத்திரமடைந்த ரமேஷ் கட்டையால் தாக்க, செல்வம் அங்கேயே மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் சதீஷ் கல்லை எடுத்து செல்வத்தின் தலையில் போட்டுக் கொலை செய்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/21/5-2025-11-21-17-44-01.jpg)
இதையடுத்து ரமேஷ், சதீஷ் இருவரும் நடந்த சம்பவத்தைப் பொம்மனிடம் கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஆனால், இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுக்காமல் பொம்மன் தனது உறவினர் மாதவனின் உதவியுடன் செல்வத்தின் உடலை அங்கேயே குழி தோண்டிப் புதைத்துள்ளார் என்று தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருப்பூரில் தலைமறைவாக இருந்த ரமேஷ், சதீஷ் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். மேலும் உடலைப் புதைத்த குற்றத்திற்காக பொம்மன் மற்றும் அவரது உறவினர் மாதவன் என நான்கு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிச்செட்டிபாளையம் மாவட்டச் சிறையில் அடைத்தனர்.
கட்டடத் தொழிலாளி கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தில் கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப் பிறகு கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Follow Us