பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் தாரிக் முகமத் ஜஹாங்கிரி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு, உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நீதிபதியாக பணியாற்றி வரும் இவரைக் குறித்து வெளியான தகவல்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisment

இவர், 1988 ஆம் ஆண்டு கராச்சி பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டப்படிப்பு படித்து வந்தார். அந்த சமயத்தில், 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் இவர் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, இவருக்கு மூன்று ஆண்டுகள் தேர்வெழுதப் பல்கலைக்கழகம் தடை விதித்தது. ஆனால், இவர் அந்த தடையை மீறி வேறொரு மாணவரின் சேர்க்கை எண்ணை வைத்து, 1990 ஆம் ஆண்டு தேர்வெழுதியதாகக் கூறப்படுகிறது.  

Advertisment

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் ஆவணங்கள் மற்றும் பதிவாளர் சமர்ப்பித்த ஆவணங்கள் ஆகியவை நீதிமன்றத்தில் ஆய்விற்குட்படுத்தப்பட்டது. இதில், கல்வி சான்றிதழ்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சர்தார் முகமது சர்ப்ராஸ் தலைமையிலான அமர்வு, முகமத் ஜஹாங்கிரியின் பதவி நியமனம் செல்லாது என அறிவித்தது. 116 பக்கங்களைக் கொண்ட அந்த தீர்ப்பில், இவரைப் பதவியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, இவர் கடந்த ஐந்து ஆண்டுகாலமாக நீதிபதி பதவியில் இருந்து வழங்கிய தீர்ப்புகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் நீதித்துறை வரலாற்றில் மிக முக்கிய சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.

Advertisment