Advertisment

எம்.எல்.ஏ.வின் காத்திருப்பு போராட்டம்; முடிவுக்கு வந்த 35 ஆண்டுகால கோரிக்கை!

104

புவனகிரி அருகே கீழ்வளையமாதேவி ஊராட்சியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 450-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்கள். கடந்த 1990-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 35 பட்டியல் சமூக குடும்பங்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை மூலம் குடிமனை வழங்க நிலம் எடுக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தை முறையாக அளந்து பட்டா வழங்கப்படாததால், இவர்களுக்கு இதுவரை மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு பட்டா வழங்கி அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Advertisment

அதேபோல், 2011-ஆம் ஆண்டு அதே பகுதியில் மற்ற 14 பட்டியல் சமூக குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை வருவாய்த்துறை ஆவணப் பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதை உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், இப்பகுதியில் ஒரே வீட்டில் 2 அல்லது 3 குடும்பங்கள் இட வசதியின்றி வாழ்ந்து வருகின்றனர்.

Advertisment

103

கீழ்வளையமாதேவி ஊராட்சியில் 23 ஏக்கர் அரசு தரிசு நிலம் உள்ளது. அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வீடற்று இட நெருக்கடியில் வாழும் 150 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை(31.7.2025) காலை 9 மணி முதல் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்வகோட்டை தொகுதி சிபிஎம் எம்எல்ஏவுமான எம். சின்னதுரை, மாவட்டச் செயலாளர் எஸ். பிரகாஷ், பொருளாளர் டி. கிருஷ்ணன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.கே. சரவணன், விவசாய சங்கத் தலைவர் தா. சண்முகம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின்  மாவட்ட நிர்வாகிகள் மணி, ஜீவா உள்ளிட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் கீழ்வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

100

இதனை அறிந்த வட்டாட்சியர் சரவணன், போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது. எம்எல்ஏ மக்களுடன் காத்திருப்புப் பந்தலில் மதிய உணவு அருந்தி, போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர், 35 குடும்பங்களுக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க பைப்பலைன் அமைக்கப்படும் என்று உறுதியளித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டனர். மின்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, வீடுகளுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 14 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாவை வருவாய்த்துறை பதிவேட்டில் பதிவேற்றி, இ-பட்டா வழங்கவும், இட நெருக்கடியில் வாழும் 150 குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்துப்பூர்வ உறுதி அளித்தனர். இதனை ஏற்று, அனைவரும் மாலை 3 மணிக்கு மேல் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ சின்னதுரை, "கடந்த 35 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள், மனைப் பட்டா, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை கேட்டு போராடி வருகின்றனர். இந்தக் காத்திருப்புப் போராட்டத்தின் விளைவாக, குடிநீர் கிடைக்க உடனடியாக பைப்பலைன் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற உறுதி கூறியுள்ளனர். மேலும், இப்பகுதி மக்களுக்கு 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளேன். அதிகாரிகள், இப்பிரச்சினைகள் முடிந்தவுடன் வீடு கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். 35 ஆண்டு காலப் போராட்டம் முடிவுக்கு வருகிறது," என்றார்.

101

போராட்டத்தில் கலந்து கொண்ட கீழ்வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த அஞ்சம்மாள், வாசுகி ஆகியோர் கூறுகையில், "இப்பகுதியில் குடிநீர் இல்லாததால், சற்றுத் தொலைவு சென்று குடிநீர் எடுத்து வாழ்ந்து வருகிறோம். வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. இரவு நேரத்தில் வெளிச்சமின்மையால், எங்கள் 8 வயது சிறுவன் கவினேஷ், 60 வயது முதியவர் ராயர் ஆகியோர் கட்டுவிரியன் பாம்பு கடித்து இறந்துள்ளனர். பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லை. இப்போராட்டத்தால், அதிகாரிகள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்ற வேண்டும்," என்றனர். 

போராட்டத்தை முன்னெடுத்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்துக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் கிராம மக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

communist party MLA puvanakiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe