கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலத்திற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலின் பெயரில் புதன்கிழமை 3,5 ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, விருத்தாச்சலம் உள்ளிட்ட பல்வேறு வட்டப் பகுதிகளிலிருந்து ரேஷன் கடைகளில் ரேஷன் அரிசி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் போது எடை குறைவாக வழங்கப்பட்டு அதனை காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 1 மணியிலிருந்து 3 மணிக்குள் வெள்ளை சாக்கில் மூட்டை மூட்டையாக இருசக்கர வாகனம் வியாபாரிகள் மூலம் கடத்தப்படுவதாக தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் புகார் கூறப்பட்டு வந்தது.

அந்தந்த பகுதியில் உள்ள வருவாய்த் துறையினர் மற்றும்  குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறையினர். இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கடலூரில் இருந்து புதுச்சேரி மாநிலம் நோக்கி சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆக 6-ந்தேதி தகவல் வந்தது அதன் பேரில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் பறக்கும் படையினர் கடலூர் சாவடி அருகே வேகமாக வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.  அப்போது வாகனத்தை நடுரோட்டிலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓட்டுநர் தப்பிவிட்டார்.

இதையடுத்து பறக்கும் படையினர் சரக்கு வாகனத்தில் சோதனை செய்ததில் 3.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது பின் சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் இதனை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபர் யார்? இந்த அரிசி எங்கிருந்து கடத்தப்படுகிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ரேசன் கடைகளில் கள்ள சந்தையில் மூட்டை மூட்டையாக பெற்றும்  வீடுகளில் ரூ 10க்கு பெற்று வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்து ரூ 50 வரை விற்பனை செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் துவரம் பருப்பு, ஆயில் உள்ளிட்ட பொருட்களை அதே பகுதியில் உள்ள தெருக்கடைகள் ஓட்டல்களில் விற்பனை செய்கிறார்கள். இதனை ரேஷன் கடை உள்ள தெருக்களில் உள்ள வீடுகளில் இருக்கும்  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் யார் தொடர்ந்து ரேஷன் கடைக்கு வருகிறார்கள். அவர்கள் எப்படி ரேஷன் பொருட்களை கடத்துகிறார்கள் என்று தெளிவாக தெரியும்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட சிதம்பரம் வட்ட வழங்கல் அலுவலரிடம் பலமுறை பொதுமக்கள் கூறியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதேபோல் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு வட்டப் பகுதிகளிலும் இதே நிலைமைதான், தற்போது ரேஷன் அரிசி தொடர்ந்து கடத்தப்படுவதாக நாளிதழ்களில் செய்திகள் வந்ததால் தற்போது கண்துடைப்புக்காக பறிமுதல் செய்துள்ளனர். இதுபோன்ற பல இடங்களில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கடத்துவதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில் எங்களுக்கு ஒரு மூட்டையில் 50 கிலோவுக்கு பதில் 45 கிலோ கொடுத்தால் எப்படி  சரியான எடையை போடமுடியும், 500 குடும்ப கார்டுகள் உள்ள இடத்தில் 450 கார்டுக்கு  பொருட்கள் தருகிறார்கள் இப்படி உள்ள சூழ்நிலையில் எப்படி  சரியாக இருக்கும். ரேஷன் கடைகளுக்கு எடை குறைவு இல்லாமல் பொருட்களை வழங்க தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறோம்.   இது சம்பந்தப்பட்ட அமைச்சர் வரைக்கும் தெரியும் என்கிறார்கள்.