3,200 cubic feet of water released from Bhavanisagar Dam for irrigation Photograph: (erode)
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி பகுதியில் பலத்த மழை பெய்ததால் கடந்த மாதம் 27-ம் தேதி 32 -வது முறையாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது.
இந்நிலையில் மீண்டும் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் பவானிசாகர் அணை 101 அடியை எட்டியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இன்று காலை பவானிசாகர் அணை நீர்மட்டம் 101. 82 அடியில் தொடர்ந்து நீடித்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 3, 198 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2100 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 200 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 3, 200 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வருகிறது.
எந்த நேரத்திலும் 102 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு எட்டினால் மீண்டும் பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும் வாய்ப்பு உள்ளதால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு ஏற்கனவே 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 20.01 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 13.84 அடியாக உள்ளது. வறட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.11 அடியாக உள்ளது. ஒருபுறம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மற்ற அணைகளில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.