மாமியாருடன் சண்டை போட்டதால் மருமகளை அக்கம்பக்கத்தினர் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்து மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலம், கோமதி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது மாமியாருடன் சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அக்கம்பக்கத்தினர், அந்த பெண்ணை கம்பத்தில் கயிற்றால் கட்டி வைத்து அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். மேலும், அவரது முகத்தில் கருப்பு மை பூசி, கழுத்தில் காலணி மாலையை தொங்கவிட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது கைகளை பின்னால் கட்டிய நிலையில், அவரது தலை முடியை வலுக்கட்டாயமாக வெட்டுகின்றனர். இதில் அந்த பெண் கதறி அழுது துடிக்கிறார். இதனை சிறுவர்கள் உட்பட பல குடியிருப்பாளர்கள் இந்த சம்பவத்தை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மஞ்சு ராணி தாஸ் (60), புடுல் ராணி தாஸ் (50), மற்றும் ஹமிதா பானு (60) ஆகிய மூன்று பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பாதிக்கப்பட்டவரின் தலைமுடியை வெட்டிய பெண் ஒருவர், பா.ஜ.கவுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.