காங்கிரஸ் எம்.எல்.ஏவை குறிவைத்து ஒரே மாதத்திற்குள் மூன்று திருட்டுச் சம்பவம் நடந்திருப்பது ராஜஸ்தானின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில், ஸ்ரீ பஜன்லால் ஷர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள தெளசா சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வருபவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தீன் தயாள் பைரவா. இவர் கடந்த ஜூன் 11ஆம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் 25வது நினைவு விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது, இவரது செல்போன் திருட்டுப் போனது. இந்த சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

சில நாட்களுக்கு பிறகு, எம்.எல்.ஏ பைரவா வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிள் திடீரென திருடு போனது. இந்த சூழ்நிலையில், கடந்த 6ஆம் தேதி இரவு அவரது வீட்டில் இருந்து டிராக்டர் காணாமல் போயுள்ளது. இப்படி, ஒரே மாதத்தில் மட்டும் குறிவைக்கப்பட்டு 3 முறை திருட்டு சம்பவம் நடந்துள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ பைரவா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இதற்கு முன்பு என்னிடமிருந்து ஒரு ஆணி கூட திருடப்படவில்லை. ஆனால், இப்போது இந்த மூன்று தொடர்ச்சியான திருட்டுகள் நடந்துள்ளன. மோட்டார் சைக்கிள் எடுக்கப்பட்டபோது, ​​என் வீட்டின் முன்பக்க கேமரா வேலை செய்யவில்லை, மற்ற கேமராவால் காட்சியைப் பிடிக்க முடியவில்லை.  ஒரு எம்.எல்.ஏ.வின் வீட்டில் திருடர்கள் இந்த முறையில் திருடுவது ஒரு தீவிரமான விஷயம். இது காவல்துறை குறித்து கேள்விகளை எழுப்புகிறது. மேலும், அவர்கள் மீதான நம்பிக்கையை உடைக்கிறது. ஒரு எம்.எல்.ஏ.வுக்கு இது நடந்தால் சாமானிய மக்களை எவ்வாறு பாதுகாக்க முடியும்?” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தெளசா தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த முராரி லால் மீனா மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல் முறையாக தீன் தயாள் பைரவா எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.