ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மேற்கு வங்கம் துர்காபூரின் சிவபூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவம் படித்து வருகிறார். இவர், தனது ஆண் நண்பருடன் நேற்று முன்தினம் (10.10.2025) இரவு கல்லூரி நுழைவு வாயில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர், அவர்களைத் தடுத்து நிறுத்தி அந்தப் பெண்ணைக் காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசுக்குப் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தனது மகளின் நண்பருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும், அவர் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் தனது மகளின் மொபைல் போனையும் பறித்து அவரிடமிருந்து ரூ.5,000 பறித்துச் சென்றதாகவும் தெரிவித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் மேற்கு வங்கப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் மேற்கு வங்கக் காவல்துறை நிபுணர்கள் குழுவினர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.