3 people shot massacre in involved Pahalgam incident
கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு தான் காரணம் என்பது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டிருந்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் கூடாரங்கள் குறிவைத்து இந்திய ராணுவத்தால் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர். இந்த தேடுதல் வேட்டையை ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் பாதுகாப்பு படையினர் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இன்று (28-07-25) ஸ்ரீநகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான 3 நபர்கள் நடமாடுவதாக பாதுகாப்பு படைகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் ட்ரோன்கள் மூலமாக அவர்களை கண்காணித்து வந்தனர். அதில் இந்த மூன்று நபர்கள் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்பதும் சுலைமான் என்கிற பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சி அளிக்கப்பட்டவரின் தலைமையில் தான் இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் பாதுகாப்பு படையினர் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று பிடிக்க முயற்சித்தனர். அப்போது, அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் அந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். சம்பந்தப்பட்டவர்கள், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தானா? என்பதை உறுதி செய்ய பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் இன்று ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழ்நிலையில், இத்தகைய சம்பவம் நடந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.