கர்நாடகா மாநிலம், பெங்களூருவின் சித்தாபுரா பகுதி அருகே உள்ள சாலையில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். கிளை ஒன்று உள்ளது. இந்நிலையில், இந்த ஏ.டி.எம்.-இல் பணத்தை நிரப்புவதற்காக ஜே.பி. நகரில் உள்ள தனியார் வங்கியிலிருந்து சி.எம்.எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வாகனம், 7.11 கோடி ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு நவம்பர் 19 அன்று புறப்பட்டுச் சென்றது. இந்த வாகனத்தில் ஓட்டுநர் வினோத் குமார், கேஷ் லோடிங் ஸ்டாஃப் மற்றும் இரண்டு ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் உள்பட நான்கு பேர் இருந்தனர்.

Advertisment

அப்போது, பணம் ஏற்றிக்கொண்டு சென்ற வண்டியைத் திடீரென ‘கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா’ என்று ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று வழிமறித்தது. அந்தக் காரிலிருந்து திடுக்கிட்டு இறங்கிய மர்ம நபர்கள், தங்களை இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்டனர். மேலும், “இவ்வளவு பணத்தை எடுத்துச் செல்கிறீர்கள்... அதன் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்” என்று கேஷ் லோடிங் ஸ்டாஃபிடம் கேட்டனர். பின்னர், அடுத்த நொடியில் துப்பாக்கி முனையில் பணம் ஏற்றி வந்த வாகனத்துடன் சேர்த்து அதில் இருந்த நால்வரையும் அந்தக் கும்பல் கடத்தியது.

Advertisment

டேரி சர்க்கிள் மேம்பாலம் வரை வாகனத்தை ஓட்டிச் சென்ற அந்தக் கொள்ளைக் கும்பல், மதியம் 1.15 மணிக்கு மேம்பாலத்தில் ஓரமாக வண்டியை நிறுத்தியது. பின்னர், காரிலிருந்து 7.11 கோடி ரூபாய் பணத்தை சி.எம்.எஸ். வாகனத்தில் இருந்து தங்களது காருக்கு மாற்றியது. மேலும், அவர்களிடம் இருந்த இரு துப்பாக்கிகளையும் பறித்துக்கொண்ட அந்த மர்மக் கும்பல், வாகனத்தையும் அதில் இருந்த நால்வரையும் மேம்பாலத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றது. இந்தக் கொள்ளைச் சம்பவம் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் நடந்து முடிந்தது. போகும் போது அந்தக் கும்பல், சி.எம்.எஸ். பாதுகாவலர்களிடம் இருந்து பறித்த இரு துப்பாக்கிகளையும் சாலையோரம் வீசிவிட்டுச் சென்றது.

இதனையடுத்து, சி.எம்.எஸ். வாகனத்தின் ஓட்டுநர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், உடனடியாக விரைந்து வந்த போலீசார் டேரி மேம்பாலத்தைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சி.எம்.எஸ். வாகனத்தில் இருந்த இரு பாதுகாவலர்களிடமும் துப்பாக்கிகள் இருந்திருந்தன. ஆனால், அவர்கள் அதனைப் பயன்படுத்தாமல் கொள்ளையர்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றனர். அதேசமயம், வாகனத்தின் ஓட்டுநர் உடனடியாகத் தகவலைத் தெரிவிக்காமல் சம்பவம் நடந்த ஒரு மணி நேரம் கழித்தே இந்தத் தகவலை போலீசாருக்கு கூறியிருக்கிறார். இது காவல்துறையினருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, சி.எம்.எஸ். வேனில் இருந்த வங்கி ஊழியர் தம்மயா, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் ராஜண்ணா, ஓட்டுநர் வினோத், காவலர் அஃப்தாப் ஆகிய நால்வரிடமும் தனிப்படை போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இது ஒருபுறம் இருக்க, பெங்களூரு மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

Advertisment

இந்த நிலையில், சம்பவத்திற்கு காரணமான போலீஸ் கான்ஸ்டபிள் அன்னப்ப நாயக், பணம் எடுத்துச் செல்லும் வாகன பொறுப்பாளர் கோபால் பிரசாத் மற்றும் பணம் எடுத்துச் செல்லும் சி.எம்.எஸ். நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஜே. சேவியர் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்து 5.76 கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், கொள்ளை அடிக்கப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்துள்ளனர். 
இந்தக் கும்பல் மூன்று மாதங்களாகத் திட்டமிட்டு இச்சம்பவத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. மீதமுள்ள பணத்தையும் தேடி கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.