திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து ஒன்று கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளக்காண்டம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற வாகனம் திடீரென பிரேக் பிடித்து வேகத்தைக் குறைத்துள்ளது.  இதனால் அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க அரசு பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். 

Advertisment

அச்சமயத்தில் இந்த அரசு பேருந்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஊட்டியில் இருந்து சேலம் நோக்கிச் செல்லும் அரசு பேருந்தும், கோவையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதில் திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற அரசு பேருந்தானது சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

Advertisment

இந்த விபத்தால் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துகுளி போலீசார் கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சரி செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பள்ளக்கவுண்டம்பாளையம் அருகே ஒன்றன்பின் ஒன்றாக 3 பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.