கடந்த 1 வாரமாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிதானின் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தானிய தாலிபன் அமைப்பினரை குறி வைத்து பாகிஸ்தான் கடந்த 10ஆம் தேதி விமானப் படைத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகாய் என்ற இடத்தில் ஆப்கான் படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால் பொதுமக்கள் உள்பட இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பலரும் பலியாகினர். மேலும், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த தாக்குதல் தொடர்பாக கத்தார் மற்றும் சவுதி அரேபியா அரசுகள் தலையிட்டு அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அதன்படி, இரு நாடுகளுக்கு இடையே 48 நேர போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மீறி ஆப்கானிஸ்தானின் 3 இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்டிகா மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 3 ஆப்கானிய கிரிக்கெட் வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆப்கானிய கிரிக்கெட் வீரர்களான கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகிய 3 பேரும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்திருப்பது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கர சம்பவத்துக்கு ஆப்கானிஸ்தான் அரசு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகியவை பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தரும் வகையில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் நடைபெறவிருந்த டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ஏசிபி) அறிவித்துள்ளது. நவம்பர் 5 முதல் 29 வரை லாகூர் மற்றும் ராவல்பண்டியில் 3 நாடுகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.