உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 40 வயதான சச்சின். நாள்தோறும் அதிகளவில் போதைப்பொருள் பயன்படுத்தி வந்த சச்சின், ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகியுள்ளார். இதனால், வேலைக்குச் செல்லாமல், வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு, போதைப்பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி வந்திருக்கிறார். இதனால், அவரது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், சச்சினின் இந்த மோசமான நிலை இப்படியே தொடர்ந்தால் சரியா வராது என்று எண்ணிய அவரது பெற்றோர், ஆகஸ்ட் மாதம் புலந்த்ஷாஹரில் உள்ள ஒரு போதைப்பொருள் ஒழிப்பு மறுவாழ்வு மையத்தில் சேர்த்துவிட்டுள்ளனர்.

Advertisment

ஆனால், மையத்தின் கட்டுப்பாடுகள் சச்சினுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், பெற்றோரின் தொடர் வற்புறுத்தலால், சச்சின் மையத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், மையத்தில் இருந்த சச்சினுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு, அலறித் துடித்துள்ளார். உடனடியாக, அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலில், அவர் சாப்பிட்ட உணவின் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் நினைத்துள்ளனர். ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்ததை அறிந்த மருத்துவர்கள், வயிற்றை ஸ்கேன் செய்தனர். அதில், சச்சினின் வயிற்றில் ஸ்பூன்கள், பல் விளக்கும் பிரஸ்கள், பேனாக்கள் உள்ளதைக் கண்டு மருத்துவர்களே அதிர்ந்து போயினர்.

Advertisment

உடனடியாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சச்சினுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது வயிற்றிலிருந்து 29 ஸ்பூன்கள், 19 பல் விளக்கும் பிரஸ்கள், இரண்டு பேனாக்கள் உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில், தங்களது முழு திறனையும் செலுத்தி வெற்றிகரமாகச் சிகிச்சையை செய்து முடித்தனர். தொடர்ந்து, சச்சின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் இருந்த சச்சினுக்கு, மையத்தின் செயல்பாடுகளும், அளிக்கப்படும் உணவுகளும்  எரிச்சலைத் தந்திருக்கின்றன. மேலும், மையத்தில் தங்களுக்கு குறைவான காய்கறிகள் மற்றும் உணவுகளே கொடுப்பார்கள், வீட்டிலிருந்து வரும் உணவுப் பொருட்களைக் கூட அவர்களே எடுத்துக்கொள்வார்கள். அதனால் ஏற்பட்ட கோபத்தால், இவற்றை உட்கொண்டதாக சச்சின் தெரிவித்துள்ளார். தற்போது, சிகிச்சையுடன் சேர்த்து அவருக்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisment

தற்போது, இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் போதைப்பொருள் அடிமைத்தனத்திற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.

2024-25 ஆண்டு தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் (NCRB) அறிக்கையின்படி, உத்தரப் பிரதேசத்தில் 1.2 லட்சம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 30% பேர் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு மையங்களில் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், மறுவாழ்வு மையங்களில் போதுமான மனநல ஆதரவு இல்லாதது, இதுபோன்ற தீவிரமான மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.