ஈரோடு மாவட்டம் நம்பியூர் காமராஜர் நகர் காலனியில் இருந்து நாச்சிபாளையம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கிருந்து கடந்த இரண்டு மாதங்களாக யூரியா மூட்டைகள் கடத்தப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட குடோனில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது உள்ளே பீகார் மாநிலத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள், மத்திய அரசு வழங்கும் மஞ்சள் நிற யூரியா மூட்டைகளில் இருந்த யூரியாவை வெள்ளை நிற சாக்கு பைகளில் மாற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தொழிலாளர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த இரு மாதங்களாக இதேபோன்று யூரியா மூட்டைகளை மாற்றி விற்பனைக்காக கேரளாவுக்கு அனுப்பி வருவது தெரியவந்தது. அதன்பின் குடோனில் நடத்திய சோதனையில் 567 மூட்டைகளில், 28.5 டன் யூரியா, 60 மூட்டைகளில் இருந்த 3 டன் கோதுமை இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நம்பியூர் தாசில்தார் வெங்கடேஷ் வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி, உதவி வேளாண் அலுவலர் உமா மகேஸ்வரி ஆகியோர் குடோனுக்கு சென்று அங்கு இருந்த யூரியா மூட்டைகளை பார்வையிட்டு பரிசோதனைக்காக மாதிரிகளை எடுத்துச் சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட யூரியா மூட்டைகள் அனைத்தும் மத்திய அரசு விற்பனைக்காக மானிய விலையில் வழங்கும் யூரியா என்பது விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட தொழிலாளர்கள் பீகார் மாநிலம் டானாபூர் பட்டநாத்தை சேர்ந்த சாம் (35), அதே பகுதியைச் சேர்ந்த ராதா மாத்தூர், ஆதித்யா குமார், இந்தால் மாத்தூர் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் கடந்த இரு மாதங்களாக மானிய விலையில் கிடைக்கிற யூரியாவை சாக்குகளில் மாற்றி வருவதாகவும் உரிமையாளர் யார் என்பது குறித்து தெரியாது என்றனர்.
அதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 28.5 டன் யூரியா மற்றும் கோதுமையின் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும். இதையடுத்து குடோனில் சீல் வைத்தனர். மானிய விலையில் யூரியா மற்றும் கோதுமை மூட்டைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/24/919-2026-02-24-21-23-45.jpg)