தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  

Advertisment

இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் காரைக்காலைச் சேர்ந்த 25 மீனவர்கள் காரைநகர் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். 

Advertisment

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 25 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். அதோடு மீனவர்களின் இரு விசை படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதான 25 மீனவர்கள் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு நடத்தப்படும் விசாரணைக்குப் பின் மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 25 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவ மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையானது மீனவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் உள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.