கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதிக்கு ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து இளைஞர்கள் சிலர் கஞ்சா கடத்தி வருவதாக சங்கராபுரம் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் பேரில் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் வினாயகமுருகன் தலைமையிலான போலீஸார் கடுவனூர் காப்புக்காடு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, காப்புக்காடு அருகே செல்லியம்மன் கோவில் அருகில் சந்தேகத்திற்கு இடமாக இளைஞர்கள் மூட்டைகளை வைத்து நின்று கொண்டிருந்ததைப் பார்த்த காவல்துறையினர், பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

Advertisment

விசாரணையின்போது முன்னுக்குப் பின்னாகப் பதில் அளித்த நிலையில், சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் விற்பனைக்காகக் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்கள் வைத்திருந்த வெள்ளைச் சாக்குகளைச் சோதனை செய்தபோது, கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

மேலும், கஞ்சா கடத்திய ரமேஷ், குமாரசாமி, அருண் ஆகிய மூன்று பேரும் மலைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது. இதனை அடுத்து, 11 லட்சம் மதிப்பிலான சுமார் 23 கிலோ கஞ்சாவைப் போலீஸார் பறிமுதல் செய்து, மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.