நீலகிரி மாவட்டம் உதகையில் 21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையின் பேரில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார். 23 ஆண்டுகளாக ஆசிரியராக பல அரசுப் பள்ளிகளை பணியாற்றி வந்த செந்தில்குமார், கடந்தாண்டு ஜூன் மாதம் உதகை அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு பணியிட மாறுதல் பெற்று பணிபுரிந்து வந்துள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வந்த மாணவர் மாணவிகளுக்கு அறிவியல் பாடம் எடுத்து வந்துள்ளார்.
கடந்த மூன்றாம் தேதி அப்பள்ளியில் முறையான தொடுதல்; தவறான தொடுதல் (GOOD TOUCH, BAD TOUCH) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காவல்துறையினர் சென்றிருந்தனர். அப்பொழுது பயிற்சி வகுப்பு முடிந்தவுடன் ஆறாம் வகுப்பு மாணவிகள் சில பேர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் தவறான இடங்களில் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்து புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மொத்தம் 21 மாணவிகளிடம் ஆசிரியர் செந்தில்குமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்திருந்தது. அதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் செந்தில்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் குண்டர் சட்டத்தில் அடைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் மீது தற்போது குண்டாஸ் பாய்ந்துள்ளது.