கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் வீரமணி மற்றும் உதவி ஆய்வாளர்கள் தவச்செல்வன் மாதேஸ்வரன் உள்ளிட்ட காவல்துறையினர் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள காட்டு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 2 பேர் கஞ்சா மூட்டையுடன் இருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் காவல் துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் 21 கிலோ கஞ்சா என்றும் ஒடிசா மாநிலம் சோனேப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபிலாஷ் குரு (28) மற்றும் அலிசா (24) என தெரிய வந்தது. இவர்கள் ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து பின்னர் பேருந்து மூலம் எடுத்து வந்து நெய்வேலி பகுதியில் விற்பனை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இதற்கு உடந்தையாக மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்த வந்தியதேவன் (27), நெய்வேலி அருகே வடக்கு வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (27), குறிஞ்சிப்பாடி அருகே காட்டு கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த அஜித் (26) கடலூர் அருகே குப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா (25) உன்ன மொத்தம் ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us