"மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" எனும் முழக்கத்தை முன்னிறுத்தி, தமிழகம் முழுவதும்சுற்றுப்பயணம் செய்துவருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 210 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றுஒவ்வொரு கூட்டத்திலும் நம்பிக்கை தெரிவித்து அதிமுகவினரை உற்சாகப்படுத்தி வரும் அவர், கடலூர் மாவட்டம்சிதம்பரத்திற்கு வருகை தந்தபோது, அவரதுமுன்னிலையில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கட்சியில் இணைத்துக் கொண்ட மாற்று கட்சியினருக்கு எடப்பாடி பழனிச்சாமி சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தார். அவர்களிடம் பேசுகையில், ‘’பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைய முடிவெடுத்த உங்களுக்கு எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போது கழகத்தில் இணைந்தீர்களோ அன்று முதல் அதிமுக உறுப்பினராகக் கருதுகிறோம். இந்த இயக்கத்தில் இணைவதே பெருமை.

இது மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கட்சி. மக்களுக்கு சேவை செய்வதில் முதலிடத்தில் இருப்பது அதிமுக. கட்சியில் இணைந்துள்ள உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்று மகிழ்கின்றேன்’’ என்று பேசியவர்,குழுவினருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழித் தேவன், முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.