தமிழ்நாட்டில் விவசாயிகள் விளைவிக்கும் நெல் மூட்டைகளை அரசே கொள்முதல் செய்யும் வகையில், பருவகாலங்களில் மட்டுமின்றி, ஆழ்குழாய் கிணற்றுப் பாசனத்தில் விளையும் நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்துள்ளது. ஆனாலும், பல இடங்களில் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்காததால், மழையில் நனைந்து முளைத்து நாசமாகிக் கொண்டிருக்கிறது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடியில் உற்பத்தியான நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்பட்டதால், மழையில் நனைந்து, நெல் மணிகளை உலர்த்தக் கூட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். பல இடங்களில் நெல் முளைத்து நாசமாகிறது. இதனால், விவசாயத்திற்கு வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் விவசாயிகள் தவித்த நிலையில், நெல் கொள்முதலை வேகப்படுத்தக் கோரி சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டாலும், ஆழ்குழாய் கிணற்றுப் பாசனத்தில் நெல் உற்பத்தி குறைவாகவே உள்ள நிலையில், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளின் துணையோடு, வெளியூர் வியாபாரிகளின் நெல் மூட்டைகளை இரவு 10 மணிக்கு மேல், வடகாடு உள்ளிட்ட பல நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து, சாக்கு மூட்டைகளைப் பிரித்து, கொட்டி, கொள்முதல் நிலைய சாக்குகளில் மூட்டை போட்டு வைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஒரு நிலையத்தில் 5 முதல் 10 லோடு வியாபாரிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. வியாபாரிகளின் நெல் மூட்டைகளைத் தூற்றுவது கூட இல்லை.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், கல்லணைக் கால்வாய் கடைமடைப் பாசனப் பகுதியான அத்தாணி சுற்றியுள்ள கிராமங்களில் விளைந்த குறுவை நெல் மணிகளை, அத்தாணி கிராமத்தில் உள்ள கிராம இ-சேவை மையத்தில் இயங்கும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 2,000 மூட்டை நெல் மணிகளை அதே பகுதியில் தரையில் அடுக்கி வைத்துள்ளனர். மேலேயும் சரியான தார்ப்பாய் இல்லை. மழைக் காலம் என்பதை உணர்ந்து பாதுகாப்பாக வைக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையில் அனைத்து நெல் மூட்டைகளும் நனைந்து, முளைத்து வெளியே வந்துவிட்டன. நனைந்து முளைத்து நாசமான பிறகு, அந்த மூட்டைகளை இரவு நேரங்களில் ஏற்றிச் செல்கின்றனர்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரே இடத்தில் மட்டும் இத்தனை ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து முளைத்து சேதமாகிவிட்டன. "சில நாள் மழைக்கே இப்படி என்றால், இனி பருவமழை பெய்யும்போது எப்படி நெல் மூட்டைகளைப் பாதுகாக்கப் போகிறார்கள்?" என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். "நாங்கள் கொண்டு வரும் நெல்லில் ஈரப்பதம் அதிகம் என்று காரணம் சொல்லும் ஊழியர்கள், இப்போது நனைந்து நாசமான நெல் மூட்டைகளை உலர்த்திக் கொண்டிருக்கிறார்கள். முளைத்த நெல் மணிகளை என்ன செய்வது? அரசுக்கு எவ்வளவு இழப்பு?" என்கின்றனர். "அரசுப் பணம் தானே," என்று அலட்சியம் காட்டும் அதிகாரிகளால் உணவுப் பொருள் நாசமாகிக் கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க, மண்டல அளவில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில், பல ஊர்களில் போலி விவசாயிகள் பெயரில் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் கமிஷனுக்காக இப்படி செய்கிறார்கள் என்று, கடந்த மாதம் 30-ம் தேதி, கொள்முதல் நிலைய ஊழியர்களே மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாததால், இன்னும் வியாபாரிகள் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்கின்றனர். "டெல்டாவில் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்," என்கின்றனர் கொள்முதல் நிலைய ஊழியர்கள்.