20 people passed away Massive explosive at a cracker factory in Andhra Pradesh
பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 20 தொழிலாளர்கள் பலியான சம்பவம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், காக்கிநாடா அருகே வெட்லபாலம் எனும் பகுதியில் சூரிய ஸ்ரீ ஃபயர் ராக்ஸ் என்ற பெயரில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று வழக்கம் போல் சுமார் 40க்கும் மேற்பட்டோர் வேலை செய்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த பட்டாசு ஆலையின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளது. மேலும் ஆலை முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கு மதிப்புள்ள பட்டாசுகள் மொத்தமாக வெடித்து அந்த கட்டிடமே நொருங்கி விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் பலரும் சுமார் 100 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் தற்போது வரை 20 தொழிலாளர்கள் பலியாகியுள்ள நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்த தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் அங்கு எரிந்துக் கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து பற்றி தகவலறிந்த அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோரை அங்கே அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவத்தால் மாநிலமே பரபரப்பான நிலையில் உள்ளது.
Follow Us