மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அண்மையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதன் எதிரொலியாகத் தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு மத்தியப் பிரதேச சுகாதாரத்துறை தகவல் அனுப்பி இருந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனத்தில் இது தொடர்பாக மருந்தாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் விதிகளை மீறி எத்திலீன் கிளைக்கால் என்ற நச்சுப் பொருள் இருமல் மருந்தில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதே சமயம் கோல்ட்ரிஃப் என்ற அந்த இருமல் மருந்தைப் பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் என்பவரை மத்தியப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை போலீசார் உதவியுடன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இந்த சம்பவத்தில் குழந்தைகளுக்கு கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை பரிந்துரைத்து ஏற்கனவே பிரவீன் சோனி என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மருந்தை தயாரித்த உற்பத்தி நிறுவனத்திடம் கமிஷன் வாங்கிக்கொண்டு இந்த மருந்தை பரிந்துரைத்தது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட ஸ்ரீசன் பார்மா சூட்டிக்கல் நிறுவனம் மற்றும் அதனுடைய உரிமையாளர், தமிழ்நாடு மருந்து ஆய்வாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் என பலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 13ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கலப்பட மருந்து தயாரித்தல், கொலை இல்லாத மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் சிறப்புக் புலனாய்வு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்ட் பராசிய ஜிதேந்திர ஜாட் தலைமையிலான அதிகாரிகள் மருந்து கம்பெனியின் உரிமையாளரான ரங்கநாதனை கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ரங்கநாதன் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சோதனையில் முறையாக முன் அனுமதி வாங்காமல் பல்வேறு மாநிலங்களுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கான ஆவணங்கள் மற்றும் விபரங்கள் என பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/16/a5534-2025-10-16-17-28-48.jpg)
மேலும் இந்த மருந்து நிறுவனத்தினை நேரில் சென்று ஆய்வு செய்யாமல் அந்த நிறுவனத்திற்கு தடையில்லா சான்று வழங்கியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தீபா ஜோசப் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து தீபா ஜோசப் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் வங்கி கணக்குக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் கையை கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்த இரண்டு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் பிரவீன் சோனி அந்த நிறுவனத்திடம் இருந்து 10 சதவீதம் கமிஷன் பெற்றதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் உலக அளவிலும் பூதாகரமாகியுள்ளது. அமெரிக்கவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகமான எப்டிஏ (FDA) சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உடைய இரண்டு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்காமல் கடைகளில் வாங்கப்படும் மருந்துகளை கொடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாராகும் ஸ்ரீசன் பார்மா சூட்டிகல், ரெட்னெக்ஸ் பார்மா சூட்டிக்கல் மற்றும் சேஃப் பார்மா ஆகிய மூன்று இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப், Respifresh-TR, Relife உள்ளிட்ட தரமற்ற இருமல் மருந்துகளில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தாலும் அவற்றை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளதோடு அதனை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது FDA.