அதிமுக பிரமுகர் வீட்டில் 2 டன் செம்மரக் கட்டைகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடந்த சில நாட்களாக ஜவ்வாது மலையில் இருந்து அமர்தி வழியாக கண்ணமங்கலம் பகுதிக்குள் செம்மரக் கட்டைகளை கொண்டு வந்து குடோனில் பதுக்கி வைத்து ஆந்திரா மாநிலத்திற்கு கடத்திச் செல்வதாக சிறப்பு புலனாய்வு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் கண்ணமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில தினங்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

Advertisment

அதன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்நகர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்ட பிரதிநிதி எம்.சி.ரவிக்கு சொந்தமான வீட்டை இன்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டிற்குள் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 டன் கொண்ட 106 செம்மரக் கட்டைகள் சிக்கியுள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளாக எம்.சி.ரவி வெளியூரில் வசித்து வருவதாகவும், தற்போது அந்த வீட்டில் ரவியின் அண்ணன் மகன் ரமேஷ் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அந்த தகவலின்படி, ரமேஷ் என்பவரை போலீசார் தொடர்ச்சியாக தேடி வருகின்றனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் ஆரணி வனக்காவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment