சிதம்பரம் அருகே தச்சக்காடு புதுச்சத்திரம் கொத்தட்டை உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சவுடு மணல் குவாரி இயங்கி வருகிறது. இதில் தச்சக்காடு கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணல் குவாரி  செயல்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் அதில் பி.முட்லூர் பகுதியில் இயங்கி வரும் அட்சயா மந்திர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சுல்தான் (16 ), அதேபோல் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவன் இலியாஸ் உள்ளிட்ட 5 நண்பர்கள் மணல் குவாரி குட்டையில் குளிக்கச் சென்றனர். இதில் இலியாஸ், சுல்தான் ஆகியோர் குளித்துக் கொண்டிருக்கும் போது ஆழத்தில் சிக்கிக் உள்ளனர்.

Advertisment

இதனை அறிந்த மற்ற நண்பர்கள் வெளியே வந்து சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து பரங்கிப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்‌. அதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 5 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு இலியாஸ் மற்றும் சுல்தான் உடல்களை பிணமாக இன்று (30-08-25) இரவு 9:30 மணி அளவில் மீட்டனர். மீட்கப்பட்ட உடல்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட சவுடு மாணல் குவாரிகள் இயங்கி வருகிறது.  குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட மிக ஆழமாக சவுடு மணல் அள்ளப்படுகிறது. மணல் அள்ளிய பிறகு அந்த இடங்களை சவுடு மணல் குவாரி டெண்டர் எடுத்தவர்கள் சமன் செய்வது கிடையாது. அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவார்கள். இந்த நிலையில் இந்தப் பகுதியில் மழை பெய்தாலோ அல்லது குவாரியில் ஊற்றுத் தண்ணீர் மணல் குவாரி குட்டைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் இதில் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள், பெரியவர்கள் அந்த வழியாக செல்லும் போதும் ஆடு மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று விட்டு தண்ணீர் அருந்த செல்லும்போதும் தவறி அந்த மணல் குவாரி குட்டையில் விழுந்து இறந்துள்ளனர். அதே போல் தான் தச்சக்காடு கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்ட குவாரியை அரசு அனுமதித்த அளவைவிட அதிக ஆழமாக மணல் எடுத்த இடத்தை சமன் செய்யாததால் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. அதில் மாணவர்கள் குளிக்க சென்ற போது ஆழத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பகுதியில் மணல் குவாரியை அனுமதிக்க கூடாது என சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர் மற்றும் கனிம வளத்துறையை கண்டித்து பல்வேறு போராட்டங்களை இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நடத்தியுள்ளனர். ஆனால் இவர்கள் எதற்கும் செவி சாய்க்காமல் உள்ளதால் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக மாறி வருகிறது‌. எனவே இனிமேலாவது மணல் குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட அதிக ஆழத்தில் மணல் எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. மேலும் இப்பகுதியில் உள்ள வாழ்வாதாரத்தை பாதுகாக்க மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.