ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடந்த 29ஆம் தேதி (29.09.2025) இரவு பழங்களை ஏற்றிக்கொண்டு சிறிய ரக சரக்கு வாகனம் ஒன்று திருவண்ணாமலையை நோக்கி வந்தது. இந்த வாகனத்தில் ஓட்டுநருடன் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மற்றும் அவரது வளர்ப்பு தாயார் என இருவர் இருந்துள்ளனர். இந்த வாகனம் மறுநாள் 30ஆம் தேதி (30.09.2025) அதிகாலை 02:30 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிச்சாலையில் வந்தது.
அப்போது, அங்குச் சோதனையில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுரேஷ் மற்றும் சுந்தர் இருவரும் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அதன் பின்னர் இந்த வாகனத்தைச் சோதனை செய்தனர். அதோடு இந்த இரு காவலர்களும், விசாரிக்க வேண்டும் என்று கூறி இரு பெண்களையும் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர் ஏந்தல் பகுதியில் உள்ள தோப்பில் வைத்து தயாரின் கண்முன்னே இரு காவலர்களும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து காவலர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதன்பேரில் காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரையும் கைது செய்து எஸ்.பி. சுதாகர் தலைமையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மேலும், காவலர்களால் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் இருந்து வந்த இளம்பெண்களிடம் போலீசாரே அத்துமீறிய இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் இந்த இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது.
இத்தகைய சூழலில் தான் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இரு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட எஸ்.பி . சுதாகர் பிறப்பித்திருந்தார். இந்நிலையில் இரு காவலர்களையும் நிரந்தர பணி நீக்கம் செய்து (டிஸ்மிஸ்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் இன்று (02.10.2025) உத்தரவிட்டுள்ளார்.