கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக இளைஞர் ஒருவர் தனது தந்தையை இன்று (10.09.2025) அழைத்து வந்திருந்தார். அப்போது அவரது தந்தை நீண்ட நேரமாக மருத்துவமனையில் நிற்க வைக்கப்பட்டதாகவும், வீல் சேர் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்து தனது ஆதங்கத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.
அதில், “எனது தந்தைக்குச் சர்க்கரை வியாதி உள்ளது. இதற்காக சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அதன் பிறகு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக மருத்துவமனை வளாகத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, வீல் சேருக்காக காத்திருந்தேன். இருப்பினும் எனது தந்தைக்கு நீண்ட நேரமாக வீல் சேர் கொடுக்கப்படவில்லை. எனவே அவரை லிஃப்ட் வழியாகக் கீழ்த்தளத்திற்கு அழைத்து வந்தேன். அதன் பிறகு எனது தோளில் சுமந்தபடி ஆட்டோவிற்கு அழைத்துச் சென்றேன்” எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து மருத்துவமனையின் முதல்வர் கீதாஞ்சலி செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த விவகாரம் குறித்துச் சம்பந்தப்பட்ட ஒப்பந்த ஊழியர்களிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி நோயாளிக்கு உரியச் சேவையை வழங்காமல் இருந்த ஒப்பந்த ஊழியர்களான எஸ்தர் ராணி மற்றும் மணிவாசகம் ஆகிய இரு சூப்பர்வைசர்களும் 5 நாட்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர் 15 முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருந்தார்கள். மருத்துவமனையில் கூடுதலாக வீல் சேர்கள் நிறுத்தப்படுவதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.